அதிமுகவின் துரோகத்தை இஸ்லாமியர்கள் மறக்கமாட்டார்கள்: அமைச்சர் சா.மு. நாசர்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட அதிமுக, மீண்டும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டது அம்பலம்.
அதிமுகவின் துரோகத்தை இஸ்லாமியர்கள் மறக்கமாட்டார்கள்: அமைச்சர் சா.மு. நாசர்
1 min read

இஸ்லாமிய மக்களை அவதூறாகப் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யக்கோரும் நாடாளுமன்ற தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிக்கவில்லை எனக் குறிப்பிட்டு, அந்த துரோகத்தை இஸ்லாமியர்கள் மறக்கமாட்டார்கள் என அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர்.

சமீபத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சட்டப்பிரிவு நடத்திய `பொது சிவில் சட்டம்’ தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஷேகர் குமார் யாதவ், இஸ்லாமியர்களுக்கு எதிராக அவதூறாகக் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி ஷேகர் குமார் யாதவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர நோட்டீஸை முன்மொழிந்தார் தேசிய மாநாடு கட்சியின் ஸ்ரீநகர் எம்.பி. ருஹுல்லா மெஹ்தி. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி நீக்க தீர்மானத்தை கொண்டு வரும் நோட்டீஸுக்கு அதிமுக ஆதரவு வழங்கவில்லை என குறிப்பிட்டு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு,

`அதிமுகவை சேர்ந்த நான்கு மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒருவர் கூட இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக நின்று அந்தப் பதவி நீக்க தீர்மான நோட்டீஸில் கையெழுத்திடவில்லை. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் எனக் கூறி மக்களவை ஏமாற்றிக்கொண்டு மறுபக்கம் பாஜகவின் கள்ள உறவை தொடருகிறது அதிமுக.

ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்ட அதிமுக, மீண்டும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது அம்பலமாகியுள்ளது. இஸ்லாமிய மக்களது முதுகில் குத்துவதை வாடிக்கையாகக் கொண்ட அதிமுக மற்றும் அதன் தளகர்த்தா எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தையும் இஸ்லாமிய மக்கள் என்றுமே மன்னிக்கமாட்டார்கள்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in