கல்வியைக் காவிமயமாக்கும் வகையில் உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் வி.சி.க எம்.பி. ரவிக்குமார்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த ஆகஸ்ட் 25, 26-ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு விழாவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 5, 8, 12 ஆகிய தீர்மானங்கள் கல்வியைக் காவிமயமாக்கும் வகையில் உள்ளன என்ற குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
5-வது தீர்மானம்: `முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது’.
8-வது தீர்மானம்: `விழாக் காலங்களில் முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது’.
12-வது தீர்மானம்: `முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது’.
இந்தத் தீர்மானங்கள் தொடர்பாக வி.சி.க எம்.பி. ரவிக்குமார் தன் எக்ஸ் கணக்கில் எழுதியதாவது:
பழனியில் தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் கல்வியை சமயச் சார்புடையதாக்கும் பாஜக அரசின் இந்துத்துவ செயல்திட்டத்தை முருகன் பெயரால் செயல்படுத்தும் முயற்சி.
இந்து சமய அறநிலையத்துறை தனது துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதை யாரும் விமர்சிக்கப் போவதில்லை. ஆனால், கல்வித்துறைக்குள் சமயத்தைக் கொண்டுவந்து திணிப்பது சமய சார்பின்மை என்னும் அரசியல் சாசன நெறிக்கு எதிரானது என்றார்.