பழனியில் நடந்துவரும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு.
நேற்று (ஆகஸ்ட் 24) காலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாளாக மாநாடு தொடர்ந்து நடந்து வருகிறது. மாநாட்டில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியவை பின்வருமாறு:
`குன்றக்குடி ஆதீனம், மயிலம் ஆதீனம், பேரூர் ஆதீனம், சிரவை ஆதீனம், சுகி சிவம், தேச மங்கையற்கரசி, மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரின் கலந்தாலோசனையின் பெயரில் நேற்று தொடங்கப்பட்ட இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று மட்டும் கிட்டத்தட்ட 600 கலைஞர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் குறிப்பாக பத்து வயது சிறுமி முருகர் பாடலைப் பாடியதில் தொடங்கி, தமிழகத்தில் முக்கிய ஆன்மீக அன்பர்களின் உரையாடல்கள், கலைநிகழ்ச்சிகள், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடிச்சிந்து, கந்தசஷ்டி கவசம் போன்றவை புதுமையான தோற்றத்தோடு நூற்றுக்கணக்கான கலைஞர்களால் நிகழ்ச்சிகளாக நடத்தப்பட்டன.
நான்கு நீதிபதிகள் உட்பட அனைத்து ஆதினங்களும் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர். அது மட்டுமல்லாமல் தமிழ்ப் பெரியோர்கள், ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்ஸர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களும் பங்கேற்றார்கள். 20 ஆயிரத்திலிருந்து, 25 ஆயிரம் நபர்கள் வரை மாநாட்டு வருவார்கள் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் நேற்று கூடினார்கள்’.