
திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியரும், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகனுமான 82 வயதான முரசொலி செல்வம் இன்று (அக்.10) காலை காலமானார்.
பெங்களூருவில் இருந்த முரசொலி செல்வம் இன்று காலை மாரடைப்பால் காலமானார். முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரரும், கலைஞர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் கணவரும் ஆவார்.
`திமுகவின் கொள்கை செல்வம் மறைந்தார்’ என்ற தலைப்பில் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து இரங்கல் குறிப்பு வெளியிட்டார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். அவை பின்வருமாறு:
`அந்தோ.. கழகத்தின் கொள்கை செல்வம் மறைந்தாரே! தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன். என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்து இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி வேதனைக் குருதியை வடியச் செய்கிறது
அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர் முரசொலி செல்வம். கலைஞரும் அவரது மனசாட்சியாக முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் – செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம். செல்வமே.. முரசொலி செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்’ என்றார்.