நகராட்சி ஆணையாளரான நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள்

கல்விதான் ஒரு தலைமுறையை முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் துர்கா அவர்களே எடுத்துக்காட்டு! கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து
நகராட்சி ஆணையாளரான நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள்
1 min read

நேற்று (ஆகஸ்ட் 13) சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதில் மன்னார்குடியைச் சேர்ந்த துர்கா என்பவர் நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலினிடம் இருந்து பெற்றார். துர்காவின் தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றியவர்.

பணி நியமன ஆணை பெறுவதற்கு முன் அளித்த பேட்டியில் `நகராட்சி ஆணையருக்கான பணி நியமன ஆணையை முதல்வரிடம் இருந்து பெறுவதில் மகிழ்ச்சி. தமிழக அரசின் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்திப் படித்தாலே நாம் நல்ல நிலைக்கு உயரலாம். நான் அரசுப்பள்ளி, அரசுக் கல்லூரியில்தான் படித்தேன்.

டின்பிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகும்போது அரசின் பயிற்சி மையத்தைப் பயன்படுத்தி நகராட்சி ஆணையராக பணி ஆணையை வாங்கவிருக்கிறேன். என் தந்தை மன்னார்குடி நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றினார். அவர் நல்ல துணி அணிந்ததில்லை. நான் பட்ட கஷ்டத்தை என் மகள் படக்கூடாது என்று அவர் உறுதியாக இருந்தார்.

இதற்காக பல விஷயங்களை அவர் இழந்துள்ளார். 7 மாதங்களுக்கு முன்புதான் என் தந்தை மரணமடைந்தார். என் தந்தையும், தாத்தாவும் தூய்மைப்பணியாளர்கள். இன்று நான் நகராட்சி ஆணையராகியிருக்கிறேன். இன்றில் இருந்து என் தலைமுறை மாற்றத்தைக் காணப்போகிறது. இந்த வாய்ப்பை அளித்த தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி’ என்றார் துர்கா.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் கணக்கில், `நகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்கும் திருமிகு துர்கா அவர்களின் பேட்டியைக் கேட்டு அகமகிழ்ந்தேன்! கல்விதான் ஒரு தலைமுறையையே முன்னேற்றிடும் ஆற்றல் பெற்றது என்பதற்குத் திருமிகு துர்கா அவர்களே எடுத்துக்காட்டு! நான் மீண்டும் சொல்கிறேன்… கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து!‘ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in