சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் பறக்கும் ரயில் சேவை விரைவில் இணைப்பு

புறநகர் ரயில் (கோப்புப்படம்)
புறநகர் ரயில் (கோப்புப்படம்)ANI

சென்னை பறக்கும் ரயில் சேவை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்கள்.

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதை மேம்படுத்துவது குறித்து நீண்ட நாள்களாகத் திட்டமிடப்பட்டு வருகிறது.

பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்துவதற்கான பொறுப்பை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது. இதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் கடந்த ஓராண்டாகவே நடைபெற்று வருகின்றன. இதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாநில அரசு மற்றும் தெற்கு ரயில்வே இடையே இது தொடர்பான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாமல் உள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்தாகாத போதிலும், பறக்கும் ரயில் சேவை மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தை இணைப்பதற்கானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக திருமயிலை மற்றும் திருவல்லிக்கேணி ரயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள். இந்த ரயில் நிலையங்களின் தரத்தை மெட்ரோ ரயில் நிலையங்களின் தரத்துக்கு உயர்த்துவதற்கான மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முதற்கட்ட ஆய்வுக்குப் பிறகு இந்த ரயில் நிலையங்களை மேம்படுத்துவது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

பறக்கும் ரயில் சேவையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள், ஏசி ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்துவது, பயண நேரங்களைக் குறைப்பது போன்ற காரணங்களுக்காகப் பறக்கும் ரயில் சேவை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.

பறக்கும் ரயில் சேவை - சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இணைப்பு நடைபெற்றாலும்கூட, இந்த இணைப்பு நடைமுறையின்போது பறக்கும் ரயில் சேவையில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. பறக்கும் ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வரும் நேரத்திலேயே, தரத்தை உயர்த்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in