வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பொது நிகழ்ச்சியொன்றில் தனது உதவியாளரை மரியாதை குறைவாகப் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி இன்று தொடங்கியது. இரு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டார்கள்.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அனைவரும் வணக்கம் தெரிவித்து உரையாற்றினார். உரையைத் தொடங்கியவுடன் பின்புறம் திரும்பிப் பார்த்தார் அவர்.
"எங்கயா அவன், பரசுராம் எங்கே? எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே?" என்று மேடையிலிருந்தபடி மைக்கின் முன் பேசினார் அமைச்சர் பன்னீர்செல்வம். அவருடைய உதவியாளரும் பதற்றத்துடன் வந்து அமைச்சர் கேட்ட ஆவணத்தைக் கொடுத்துச் செல்கிறார்.
பொது நிகழ்ச்சியில் அனைவரது முன்னிலையும் மேடையிலேயே அமைச்சர் தரக்குறைவாகப் பேசியது சர்ச்சையானது. அமைச்சர் திட்டிய காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது.