கீழடி அறிக்கையை திருப்பியனுப்பிய மத்திய அரசு: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது `விரைவில் வெளியிடப்படும்’ என்று தொல்லியல் துறையால் உறுதிமொழி அளிக்கப்பட்டது.
சு. வெங்கடேசன் - கோப்புப்படம்
சு. வெங்கடேசன் - கோப்புப்படம்ANI
1 min read

திருத்தம் தேவை என்று கீழடி அறிக்கையை மத்திய தொல்லியல்துறை திருப்பி அனுப்பியுள்ள விவகாரத்தில், மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018 முதல் தற்போது வரை பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கீழடி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்க்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தன் எக்ஸ் கணக்கில் சு. வெங்கடேசன் இன்று (மே 22) வெளியிட்ட பதிவில் கூறியதாவது,

`கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் மத்திய தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார். ஆனால் மத்திய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது `விரைவில் வெளியிடப்படும்’ என்று தொல்லியல் துறையால் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வரும் மே 27-ல் நாடாளுமன்ற உறுதிமொழிக் குழுவின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என்று மத்திய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது. கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க மத்திய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

`தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்’ என்றென்றும் எதிரிகள் யார் என்பதை மத்திய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது. புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி வரும் மத்திய அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது மத்திய அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது! அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது. `கீழடி தமிழர்களின் தாய்மடி’ என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்’ என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in