
மத்தியப் பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்டு 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில், மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரை மத்தியப் பிரதேச காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர்.
மத்தியப் பிரதேசம் சிந்த்வரா மாவட்டத்தில் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு அடுத்தடுத்து 20 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து மத்தியப் பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தை உட்கொண்டதுதான் உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்பட்டது. இச்சம்பவத்தில் கோல்ட்ரிஃப் மருந்தைக் குழந்தைகளுக்குப் பரிந்துரைத்த அரசு மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார்.
மேலும், இருமல் மருந்தைத் தயாரித்த காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரீசான் ஃபார்மா நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனத்தின் இருமல் மருந்துகள் தமிழகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அப்போது, மருந்தில் டைஎத்திலீன் கிளைசால் என்ற நச்சு ரசாயனம் 48%-க்கும் அதிகமாக கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விற்பனைக்குத் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை தடை விதித்தது. மேலும், கடந்த அக்டோபர் 3 அன்று ஸ்ரீசான் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டு, மருந்து தயாரிக்கும் உரிமம் ரத்து செய்யப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஸ்ரீசான் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்த காவலர்கள் குழு, கைது செய்தனர். சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து கைது செய்த அதிகாரிகள், சுங்குவார்சத்திரத்தில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலைக்கு அழைத்துச் சென்றூ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இன்று மாலை ரங்கநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிந்த்வாரா அழைத்துச் செல்லப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கோல்ட்ரிஃப் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடுத்தகட்டமாக அந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள மருத்துவ நிறுவனத்தின் உரிமத்தையும் நிரந்தரமாக ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ்நாடுதான் இந்த மருந்துகளில் நச்சுத்தன்மை இருப்பதைக் கண்டுபிடித்து மற்ற மாநிலங்களுக்குத் தெரிவித்திருக்கிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் முறையாக ஆய்வு மேற்கொள்ளாத இரண்டு மூத்த மருந்து ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்தார்.