அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணமாக முதலீடுகளை ஈர்க்கச் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று (செப்.05) மேற்கொள்ளப்பட்டன.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ. 500 கோடி முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விஸ்டியன் நிறுவனத்தின் சார்பில் ரூ. 250 கோடி முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கும், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் (Sensors and Transducers) உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கும், தமிழக அரசால் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சிகாகோவில் நேற்று நடைபெற்ற இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மட்டும், தமிழ்நாட்டுக்கு ரூ. 850 கோடி அளவுக்கு முதலீடுகள் வர இருக்கின்றன.
கடந்த செப்.04-ல் ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ. 2000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.