சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் இரு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை விதிக்கப்பட்டதால் ஊழியர்களும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாயினர்.
சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் செல்ல இன்று (செப்.24) இரு சக்கர வானகங்களுக்குத் திடீர் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையால் அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த விமான நிலைய ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
விமான நிலைய வாகன நிறுத்துமிடங்களைப் பராமரிக்கும் ஊழியர்கள் அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் இருந்து வாகனங்களின் சாவிகளை பறித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதங்கள் எழுந்ததாக செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த சென்னை விமான நிலைய அதிகாரிகள், 2022-ல் மல்டி லெவல் கார் பார்க்கிங் திறக்கப்பட்டதில் இருந்து விமான நிலைய வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தத் தடை உள்ளதாகவும், இரு சக்கர வாகனங்களால் விமான நிலை வளாகத்துக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து, மல்டி லெவல் கார் பார்க்கிங்கை ஒப்பந்தம் எடுத்துள்ள ஸ்டால்வார்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் விமான நிலைய நிர்வாகம் உள்ளதாகவும், ஸ்டால்வார்ட் நிறுவனம் விதிக்கும் நிபந்தனைகளை விமான நிலைய நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாகவும் பயணிகள் குற்றம்சாட்டினார்கள். விமான நிலைய நிர்வாகத்தின் இந்த திடீர் செயல்பாடு சரியானது அல்ல எனவும் பயணிகள் கருத்து தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலைய வளாகத்துக்குள் செல்ல கடந்த 8 வருடங்களாக ஆட்டோக்களுக்கு தடை உள்ளது.