
1971-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளின் வரையறை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கவேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 5) காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
`இங்கு வந்திருக்கும் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்தவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்தவே இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.
தொகுதி மறுசீரமைப்பு என்கிற கத்தி தென் மாநிலங்கள் மீது தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்படவிருக்கிறது. தற்போது உள்ள 39 மக்களவை தொகுதிகளை குறைக்கக்கூடிய அபாயம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
2026-ல் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்யவிருக்கிறது. பொதுவாக இதை மக்கள்தொகையை கணக்கிட்ட பிறகே செய்யவேண்டும். மக்கள்தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்கிற இலக்கில் தமிழ்நாடு வெற்றிபெற்றுள்ளது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டம், பெண் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலம் இதை நாம் சாதித்துள்ளோம். மக்கள்தொகை குறைவாக உள்ளதால் நமக்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மொத்தமாக 8 மக்களவை இடங்களை தமிழ்நாடு இழக்கும் என்று கூறப்படுகிறது.
மக்களவை தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 848 ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைக்கப்பட்டால் நமக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்கவேண்டும், ஆனால் தற்போதைய மக்கள்தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால் 10 தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கும்.
எனவே 12 தொகுதிகளை நாம் இழக்க நேரிடும். நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள்தொகையை கொண்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்த கவலை அல்ல, தமிழகத்தின் உரிமை சார்ந்த கவலை.
தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணையவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாடு மக்களின் பிரதிநிதித்துவத்தை எண்ணிக்கையை குறைத்துவிடும்.
இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்கவேண்டும். இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தென் இந்தியாவிற்கே அபாயமான செயல். இதில் நமக்குள் கருத்துவேறுபாடு இருக்கக்கூடாது.
எனவே இதில் உறுதியான நிலைபாட்டை எடுக்கவேண்டும் என்று கூறி, தீர்மானத்தை முன்மொழிகிறேன்.
நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாக கடுமையாக எதிர்க்கிறது.
நாட்டின் நலனுக்காக மக்கள்தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பது முற்றிலும் நியாயமற்றது.
1971-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே நாடாளுமன்ற தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என கடந்த 2000-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் உறுதி அளித்தவாறு, தற்போதும் இந்த வரையறை 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்கவேண்டும்
நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், 1971-ம் ஆண்டின் மக்கள்தொகை எண்ணிக்கை அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகள் எண்ணிக்கை இருக்கிறதோ, அதே விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு அனைத்து கட்சிக்கூட்டம் வலியுறுத்துகிறது.
தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிராக இல்லை. அதேநேரத்தில் கடந்த 50 ஆண்டுகளாக சமூக – பொருளாதார நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கு தண்டனையாக தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக்கூடாது என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது இந்த கோரிக்கைகளை தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக்கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது.
இக்கோரிக்கைகளையும், அது சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து எம்.பி.க்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பிடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது’ என்றார்.