
பெரியார் குறித்து சீமான் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்களில் அவர் மீது சுமார் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் கடலூர் மாவட்டத்தில் நடந்த நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அதற்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தந்தை பெரியார் குறித்து சர்ச்சை கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தபெதிகவினர் சீமானின் நீலாங்கரை இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டக் காவல் நிலையங்களில் திக, தபெதிக, திமுக நிர்வாகிகள் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அந்த வகையில் சீமான் மீது சுமார் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது மனுவில்,
`பெரியார் குறித்து சீமான் தெரிவித்துள்ள அவதூறு கருத்துகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகின்றன. அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே எனது புகாரின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார் ரமேஷ்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம். நிர்மல் குமார், சீமான் பேசியுள்ள கருத்துகள் சமூகத்தில் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் உள்ளன எனக் கூறி, மனுதாரரின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.