கிருஷ்ணகிரி பள்ளியில் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் என்சிசி பயிற்சியாளர் போலியானவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தனியார் பள்ளியில் கடந்த 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தேசிய மாணவர் படை (என்சிசி) முகாம் நடைபெற்றுள்ளது. இதில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 17 மாணவிகள் கலந்துகொண்டார்கள். இவர்கள் அனைவரும் பள்ளியிலேயே தங்கி என்சிசி முகாமில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு சிவராமன் என்பவர் உள்ளிட்டோர் மாணவிகளுக்குப் பயிற்சியளித்துள்ளார்கள். பயிற்சியின்போது, கடந்த 8 அன்று நள்ளிரவில் சிவராமன் என்பவர் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி இதுதொடர்பாக பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் என்பவரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு, இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என பள்ளி முதல்வர் தெரிவித்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் மாணவியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். பிறகு, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. முதல் என்சிசி பயிற்சியாளர் சிவராமன், பள்ளி முதல்வர் சதீஷ்குமார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர், பள்ளியின் தாளாளர், என்சிசி பயிற்சியாளர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட சிவராமன் தலைமறைவானார். இவர் கோவையில் வைத்து கைது செய்யப்பட்டார். சுதாகர் என்பவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் முதல் அதிர்ச்சித் தகவலாக கிருஷ்ணகிரி பள்ளியில் ஒரு மாணவி மட்டுமே பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வந்த நிலையில், தற்போது மொத்தம் 13 மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதவரி, பள்ளியில் என்சிசி பயிற்சியளித்த சிவராமன் போலி பயிற்சியாளர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிவராமன் மேலும் நிறைய பள்ளிகளில் பயிற்சியளித்துள்ளதால், விசாரணை பல்வேறு கோணங்களில் விரிவடைந்துள்ளது.
முன்னதாக, நாம் தமிழர் கட்சியில் இளைஞர் பாசறையில் இருந்த சிவராமன், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.