திமுக ஆட்சியில் மேலும் பல சார்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமி

தலைநகரின் முக்கியமான அரசு மருத்துவமனையில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது இல்லை என்ற நிலையைக் காட்டிவிட்டது.
திமுக ஆட்சியில் மேலும் பல சார்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்: எடப்பாடி பழனிசாமி
1 min read

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த பாலியல் தொல்லை சம்பவத்தை முன்வைத்து, திமுக ஆட்சியில் மேலும் பல சார்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற நபர் நேற்று (ஜன.13) இரவு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் வார்டுக்குள் சென்று அங்கு தூங்கிக்கொண்டிருந்த 50 வயது பெண் நோயாளி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமாரைப் பிடித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பிறகு சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் சதீஷ் குமார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளவை பின்வருமாறு,

`சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்த ஒருவன், உள்நோயாளியாக இருந்த பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மீண்டும் தலைநகரில் உள்ள மிக முக்கியமான அரசு மருத்துவமனையில், இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது துளியும் இல்லை என்ற வெட்கக்கேடான நிலையை தெளிவாகக் காட்டிவிட்டது.

பெண்கள் பாதுகாப்புப் பற்றி சட்டப்பேரவையில் வசனம் பேசிய முதல்வர் ஸ்டாலின், இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? யார் அந்த சார்? என்று கேட்டாலே எரிச்சல் ஆகும் ஸ்டாலினின் ஆட்சியில், இதுபோன்ற சார்கள் காப்பாற்றப்படுவதால்தான், மேலும் பல சார்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.

கீழ்பாக்கம் மருத்துவமனை பாலியல் வழக்கில் கைதானவனுக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்யமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in