
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துமிடங்களுக்கான மாதாந்திர பாஸ் நடைமுறையும், சில மெட்ரோ நிலையங்களில் பயண அட்டை விற்பனையும் நிறுத்தப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிக்க தொடக்கம் முதல் பயண அட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக, கடந்த 2023-ல் சிங்கார சென்னை (ஸ்மார்ட்) அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வரும் ஏப்ரல் 1 முதல் சிங்கார சென்னை (ஸ்மார்ட்) அட்டைகளுக்கு முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்தது.
இந்நிலையில், இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் வெளியான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
`மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வரும் பிப்ரவரி 1 முதல் வாகனங்களுக்கான மாதாந்திர பாஸ் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் இனி வாகன நிறுத்துமிடங்களை பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்கள் நிறுத்துவதற்காக 2025 ஜனவரியில் வாங்கப்பட்ட மாதாந்திர பாஸ்கள், அவை செல்லுபடியாகும் காலம் வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படும்.
வரும் ஏப்ரல் 1 முதல் சிங்கார சென்னை (ஸ்மார்ட்) அட்டைகளுக்கு முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, 41 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் படிப்படியாக பயண அட்டைகள் ரீசார்ஜ் செய்யும் வசதிகள் நிறுத்தப்படுகின்றன.
முதற்கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவெற்றியூர் தேரடி, திருவெற்றியூர், நந்தனம், சின்னமலை, ஓடிஏ-நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய் நகர் ஆகிய 11 மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டைகளின் விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதிகள் நிறுத்தப்படுகின்றன.
எனவே பயண அட்டையில் உள்ள மீதத் தொகையை பயன்படுத்திவிட்டு, சிங்கார சென்னை (ஸ்மார்ட்) அட்டையை வாங்கிப் பயன்படுத்துமாறு பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.