

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் இன்று இரவுக்குள் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்து வருகிறது. மறுபுறம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயலுக்கு தாய்லாந்து நாடு ‘மோன்தா’ என்ற பெயரை வழங்கியுள்ளது. இன்று காலை 5:30 மணி அளவில் மோன்தா புயல் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், மோன்தா புயல் அடுத்த சில மணி நேரங்களில் தீவிர புயலாக வலுப்பெறும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, இன்று காலை 05:30 மணிக்கு, மேற்கு மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு - மத்திய வங்கக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் வடக்கு - வடமேற்கு திசையில் நாளை காலைக்குள் (அக்.28) தீவிர புயலாக வலுவடையும். பின்னர் வடக்கு - வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலையில் ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 90 - 100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மோந்தா புயலால் சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை என்று சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மோந்தா புயலைப் பொறுத்தவரை சென்னையில் இன்று நாள் முழுவதும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். ஆந்திராவுக்கு அருகில் உள்ள திருவள்ளூரில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் புலிகாட் பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யும். வடசென்னையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தென்சென்னையில் குறைவாகவே மழை பெய்யும். மோந்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம் மழை குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
The Montha cyclone that has formed in the southeast Bay of Bengal is likely to intensify into a severe cyclone by tonight, the Meteorological Department has stated.