

மோன்தா புயல் கரையைக் கடந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த அக்டோபர் 27 அன்று அதிகாலை மோன்தா புயல் உருவானது.. இதன் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதற்கிடையில் நேற்று (அக்.28) காலை மோன்தா புயல், மேலும் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்றது.
இதனால் கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 6 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகளும், அதிக மழைப்பதிவு பதிவான சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகளும் ஏற்றப்பட்டன.
இப்புயல் நேற்று நள்ளிரவில் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையில் காக்கிநாடாவுக்கு அருகே தீவிரப் புயலாகவே கரையைக் கடந்தது. அப்போது அதிகபட்சமாக மணிக்கு 100 முதல் 110 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஆந்திர மாநிலத்தில் அதிகனமழை பெய்தது. தமிழ்நாட்டிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகனமழை பெய்தது. வட சென்னை பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்நிலையில், கரையைக் கடந்த மோன்தா புயல், அடுத்த சில மணி நேரங்களில் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“ஆந்திர பிரதேசத்தின் நர்சாபூருக்கு 80 கி.மீட்டர் தொலைவிலும் மேற்கு காக்கிநாடாவுக்கு 100 கி.மீட்டர் தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்திற்கு 90 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ள மோன்தா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் வடக்கு - வடமேற்கு திசையில் ஆந்திரா - தெலங்கானாவின் கரையோரம் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும். அதன்பின் அடுத்த 6 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும்.
கிழக்கு மத்திய அரபுக் கடலில் நிலைகொண்டுள்ள மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி கடந்த 6 மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 36 மணி நேரங்களில் வடகிழக்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியைக் கடக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இன்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, தென்காசி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், திருநெல்வேலி, தேனி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The India Meteorological Department has stated that Cyclone Montha, having crossed the coast, will weaken into a depression within the next few hours.