நம்ம மதத்தையே அழிப்பேன் என்று சொல்பவர்களுக்கு ஏன் வாக்களிக்கிறீர்கள்?: நிர்மலா சீதாராமன்

"இண்டியா கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் நமக்கான ஒரு பொழுதுபோக்கு."
நம்ம மதத்தையே அழிப்பேன் என்று சொல்பவர்களுக்கு ஏன் வாக்களிக்கிறீர்கள்?: நிர்மலா சீதாராமன்

ஆன்மிகத்துக்கு எதிராக இருக்கக்கூடிய எந்தக் கட்சியும் எதிர்க்கட்சியாகவும், ஆட்சிக்கும் வரக்கூடாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சாணக்யா சேனலில் 5-ம் ஆண்டு விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

"மக்களுக்கு நாங்கள் என்ன செய்வோம் என்பதுதான் கொள்கையாக இருக்க முடியும். அதைதான் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மோடியை நீக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோளாக உள்ளது. அவரை ஏன் நீக்க வேண்டும். அவர் ஊழல் செய்தாரா? மக்கள் நலனுக்காக எதையும் செய்யாமல், பாகிஸ்தானுக்கோ வேறு நாட்டுக்கோ எதையாவது செய்து வருகிறாரா? என்ன மாதிரியான அரசியல் இது?.

இண்டியா கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் நமக்கான ஒரு பொழுதுபோக்கு. பொறுப்பான கட்சியாக இருந்தால், நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடியவர்களின் மதம் குறித்து கீழ்தரமாக பேசுவோமா?.

எந்த மதத்தையும் அருகில் வைத்துக்கொள்ள வேண்டாம். எதையும் தாழ்வுபடுத்த வேண்டாம். ஆன்மிகத்துக்கு எதிராக இருக்கக்கூடிய எந்தக் கட்சியும் எதிர்க்கட்சியாகவும், ஆட்சிக்கும் வரக்கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம்.

நம்ம கோயிலை அழிக்கக்கூடிய, கோயிலை சுரண்டக்கூடிய, நம்ம மதத்தையே அழிப்பேன் என்று சொல்லக்கூடிய கட்சிக்கெல்லாம் எதற்கு வாக்களிக்கிறீர்கள்?" என்றார் நிர்மலா சீதாராமன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in