தேர்தல் நடத்தை விதிகள் அமல்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு

"85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே வந்து தபால் வாக்குகளைப் பெறவுள்ளோம்."
கோப்புப்படம்
கோப்புப்படம்படம்: https://twitter.com/TNelectionsCEO

தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல், 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டின் விளவங்கோடு உள்பட 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் உள்ளிட்ட அறிவிப்புகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

"தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாள்.

தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பெயர் இல்லையெனில், உடனடியாக விண்ணப்பிக்கலாம். அதற்கு இன்னும் நேரம் உள்ளது.

85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வீடுகளுக்கே வந்து தபால் வாக்குகளைப் பெறவுள்ளோம். இதற்காக 12டி விண்ணப்பப் படிவத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் (விஏஓ) வீடுகளுக்குச் சென்று வழங்குவார்கள். இதைப் பூர்த்தி செய்து விஏஓ வசம் கொடுத்தால், வீட்டிற்கே வந்து வாக்குகளைச் சேகரிப்பதற்கான வசதிகளைச் செய்யவுள்ளோம்.

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.

மதம், சாதி ரீதியாக வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்கக் கூடாது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க எந்தத் தடையும் இல்லை. இதைப் பயன்படுத்தி வாக்குகளை சேகரிக்கக் கூடாது" என்றார் சத்யபிரதா சாகு.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in