முதல்வருடன் சந்திப்பு: மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறாரா கமல்ஹாசன்?

"மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டதற்காக நன்றி என நினைத்துக் கொண்டிருந்தார்கள்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினர் ஆகவுள்ளதாகத் தகவல் வரும் நிலையில், அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார்.

தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஜூலையில் நிறைவடைகிறது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை இடம் என கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு மக்களவைத் தொகுதி மட்டுமே மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.

எனவே, ஜூலையில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவே அதிகளவில் வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்தார் கமல்ஹாசன்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:

"நான் வரும்போதே முதல்வரிடம் நன்றி சொல்ல வந்துள்ளீர்களா என்று கேள்வியெழுப்பப்பட்டது. மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டதற்காக நன்றி என நினைத்துக் கொண்டிருந்தார்கள். அது கட்சியில் முடிவாகி யார் என்று முடிவானவுடன் அப்போது நன்றி சொல்ல வருவோம். தற்போது, நன்றி சொல்வதற்காக அல்லாமல் கொண்டாடுவதற்காக வந்துள்ளோம்.

ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு நமக்கு சாதகமான தீர்ப்பு என்று சொல்வதைவிட இந்தியாவுக்கே சாதகமான தீர்ப்பு என்று சொல்ல வேண்டும். இவர்கள் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளதால், கொண்டாடப்பட வேண்டியவர்கள் இவர்கள். அந்தக் கொண்டாட்டத்துக்காகவே நான் வந்துள்ளேன். அதில் என்ன உதவி செய்ய வேண்டுமானாலும் செய்யத் தயார், தேசிய அளவில் இந்த வெற்றியை மற்றவர்களுக்கும் பயன்படும்படி கொண்டாட வேண்டும் என்பதை அவரிடம் சொல்ல வந்தேன்" என்றார் கமல்ஹாசன்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in