
சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியான ரூ. 3 கோடியைச் செலவு செய்ய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்ள தலா ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்படும். இதில் ரூ. 2 கோடியை சட்டப்பேரவை உறுப்பினர்கள் விருப்பப்படி, தொகுதி மேம்பாட்டுக்குச் செலவு செய்துகொள்ளலாம். மீதமுள்ள ரூ. 1 கோடியை அரசு பரிந்துரை செய்யும் திட்டங்களுக்காகச் செலவு செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் இருந்தன.
இந்த நிலையில், தொகுதி மேம்பாட்டு நிதியைச் செலவு செய்வதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் இன்று அறிவித்தார்.
"சட்டப்பேரவை உறுப்பினர்களின் சிலரது கருத்துகளை நான் முதல்வரிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தற்போது தலா ரூ. 3 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதில் ரூ. 2 கோடி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூறும் பணிகளுக்காகச் செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள ரூ. 1 கோடி அரசு பரிந்துரை செய்யும் பணிகளுக்காகச் செலவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது.
இதனால், நிதி ஒதுக்கியும் பலனில்லை, கைக்கட்டியதைப்போல இருப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருதியதாகவும், ரூ. 3 கோடியும் அவர்களுடைய விருப்பப்படி செலவு செய்ய வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் முதல்வரிடத்தில் தெரிவித்தேன். முதல்வர் இதற்கு ஒப்புக்கொண்டார்.
எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரூ. 3 கோடியை நீங்களே உங்களுடைய விருப்பப்படி தொகுதி மேம்பாட்டுக்காகச் செலவு செய்துகொள்ளலாம்" என்றார் துரைமுருகன்.