
சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் வழக்கு சிபிஐ விசாரணை பற்றி மு.க. ஸ்டாலின் 2020-ல் பதிவிட்ட எக்ஸ் தளப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது.
திருப்புவனம் காவல் நிலைய மரண வழக்கில் உயிரிழந்த அஜித்குமார் (Ajithkumar) மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் (Tamilaga Vettri Kazhagam) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக அரசு மீதான விமர்சனங்கள் குறித்து ஆவேசமாகப் பேசினார். அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது குறித்தும் விஜய் பேசினார்.
"சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டபோது, இது தமிழ்நாட்டு காவல் துறைக்கு அவமானம் என்று சொன்னீர்கள். இன்று நீங்கள் உத்தரவிட்டிருப்பதற்குப் பெயர் என்னங்க சார்? அதே தானே. அன்று நீங்கள் சொன்னதும் இன்று நடப்பதும் அதே தானே. அதே சிபிஐ தானே. ஆர்எஸ்எஸ், பாஜகவின் கைப்பாவையாகத்தான் சிபிஐ இருக்கிறது.
ஏன் அங்கு சென்று ஒளிந்துகொள்கிறீர்கள். காரணம், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்று வலிமையாகக் கேட்டுள்ளோம். அதனால், அந்தப் பயத்தால் ஒன்றியத்தின் ஆட்சிக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறீர்கள்" என்றார் விஜய்.
சாத்தான்குளம் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது பற்றி முதல்வர் ஸ்டாலின் அப்போது வைத்த விமர்சனமாக விஜய் கூறியிருப்பது தற்போது சமூக ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது. விஜயின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ விசாரணை பற்றி முதல்வர் ஸ்டாலின் அப்போது பதிவிட்ட எக்ஸ் தளப் பதிவு அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஜூன் 27, 2020 அன்று மு.க. ஸ்டாலின் (MK Stalin) பதிவிட்ட எக்ஸ் தளப் பதிவு:
"ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்!"
இந்தப் பதிவுடன் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸுக்கு நீதி வேண்டும், ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸைக் கொலை செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின்.