தொகுதி மறுசீரமைப்பு - இப்போது ஏன் பேசவேண்டும்?: முதல்வர் பதில்

ஏழு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு - இப்போது ஏன் பேசவேண்டும்?: முதல்வர் பதில்
1 min read

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திரா, கர்நாடம், கேரளம், தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நாளை (மார்ச் 22) சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஃபேர் டீ-லிமிட்டேஷன்! இதுதான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது.

திமுக ஏன் இதை பேசுபொருளாக ஆக்கியது என்றால், 2026-ல் தொகுதி மறு சீரமைப்பு கண்டிப்பாக நடந்தே ஆகவேண்டும். அப்போது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நம்முடைய எம்.பி.க்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இதை உணர்ந்துதான் நாம் முதலில் குரல் எழுப்பி இருக்கிறோம்.

இது எம்.பி.க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்னை மட்டும் கிடையாது. நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்னை. அதனால் தான் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம்.

பா.ஜ.க. தவிர, மற்ற அணைத்து கட்சியினரும் ஓரணியில் நின்று, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். அதில், இந்த

தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

அதற்காக ஆந்திரா, கர்நாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதலமைச்சர்களுக்கும் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்கின்ற அந்த மாநிலங்களைச் சார்ந்த அனைத்து கட்சிகளின் தலைமைக்கும் நான் கடிதம் எழுதினேன்.

அந்தக் கடிதங்களை ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி. அடங்கிய குழு, அவர்களை நேரில் சந்தித்து கொடுத்து விளக்கம் அளித்தார்கள்.

அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் நானே தொலைபேசியில் பேசினேன். இதை தொடர்ந்து, சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் கூறினார்கள்.

இந்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நாளை (மார்ச் 22) சென்னையில் நடக்க இருக்கிறது. இப்போது எதற்கு இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டுமென்று சிலர் கேட்கிறார்கள்.

தொகுதி மறுசீரமைப்பால் நம் தமிழ்நாடும் நாம் அழைத்திருக்கின்ற மாநிலங்களும் பாதிக்கப்பட்டால் இந்திய நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பே இருக்காது. நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல்கள் நசுக்கப்படும். நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட முடியாது. இது இந்த மாநிலங்களை அவமதிக்கின்ற செயல்.

எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுத்துவிட கூடாது.

அதனால் தான், தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனைப்படி, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கின்ற இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நம்முடைய நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றியடையும். நம்முடைய இந்த முன்னெடுப்பு, இந்தியாவைக் காக்கும் என்று கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in