முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணமும்... எடப்பாடி பழனிசாமியின் விமர்சனமும்... | MK Stalin

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணமும்... எடப்பாடி பழனிசாமியின் விமர்சனமும்... | MK Stalin
2 min read

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக ஜெர்மனி சென்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டுக்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து இன்று ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றார். விமானம் ஏறுவதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் வெளிநாட்டுப் பயணம் குறித்து விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது:

"ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்கள் அளித்த வெற்றியின் ஊக்கத்தோடு, அந்தப் பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் தரும் நம்பிக்கையோடு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குப் பயணமாகிறேன். நம்பர் 1 தமிழ்நாடு என்ற இலக்குக்கு இந்தப் பயணங்கள் பாதை அமைக்கும்.

நாட்டிலேயே அதிவேகமாக வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் நம்முடைய தமிழ்நாட்டை நோக்கி புதிய முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறேன். தமிழ்நாட்டு மக்களின் அன்போடு நான் புறப்பட்டுச் செல்கிறேன்.

இதுவரை எனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் 36 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ. 18,498 கோடி மதிப்புடைய முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 30,037 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரூ. 10,62,752 கோடிக்கான முதலீடுகளை ஈர்த்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளோம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பரா???" என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை:

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளிப்பரா???

ஆரம்பம் முதல் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை.

நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஆனால், ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த 'சின்ன கலைவாணர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட விவேக் அவர்களது நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது.

'இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா?' என்று விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் 'ஒன்றுமே இல்லை' என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் அதுதான் மக்களுக்கும்' - என்பார்!

அதுபோல் ஸ்டாலின் அவர்கள் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து.

ஸ்டாலின், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஒட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin | Edappadi Palaniswami |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in