சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“நீட் தேர்வை சுற்றி நடந்து வரும் சர்ச்சைகள், அதன் நியாயமற்ற தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமூகத்தில், ஒடுக்கப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக மாணவர்களின் வாய்ப்பை நீட் பறிக்கிறது. நீட் முறைகேடு தொடர்பாக குஜராத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில், ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்களும் சம்பந்தப்பட்டதால், இது உடனடியான சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது. அனிதா உட்பட பல மாணவர்கள் உயிரிழந்ததை நாம் பார்த்திருக்கிறோம். எனவே, சமூக நீதி, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை பாதுகாப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்”.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.