தமிழ்நாட்டிற்குக் கூட்டணி ஆட்சி ஒத்து வராது: முதலமைச்சர் திட்டவட்டம் | MK Stalin |

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு முக்கியமானது...
தமிழ்நாட்டிற்குக் கூட்டணி ஆட்சி ஒத்து வராது: முதலமைச்சர் திட்டவட்டம்
தமிழ்நாட்டிற்குக் கூட்டணி ஆட்சி ஒத்து வராது: முதலமைச்சர் திட்டவட்டம்
1 min read

தமிழ்நாட்டிற்குக் கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்று முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் வலுத்து வருகிறது. மறுபுறம் திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையில் இந்தியா டுடே தொலைக்காட்சியின் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்றார்.

குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி

நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்த தொகுப்பாளரின் பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்து வந்தார். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடனான உறவு குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், “ராகுல் காந்தி அரசியலைக் கடந்து என்னைச் சகோதரராகவே பார்க்கிறார். என்னை மூத்த சகோதரராகக் கருதுவதாக வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். நானும் அவரை என் குடும்பத்தில் ஒருவராகவே பார்க்கிறேன்” என்றார்.

திமுக - காங். இணக்கமாக இருக்கிறது

தொடர்ந்து கேள்வி கேட்ட தொகுப்பாளர், “இந்தத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி எந்த அளவுக்கு இணக்கமாக இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “நாங்கள் கூட்டணிக்குள் இணக்கமாகவே இருக்கிறோம். வெளிவரும் செய்திகள் அனைத்தும் ஊடகங்கள் உருவாக்கும் வதந்தி” என்று பதிலளித்தார்.

கூட்டணி ஆட்சி ஒத்துவராது

அப்போது, “தேர்தலில் சேர்ந்து போட்டியிடுவீர்கள் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வீர்களா?” என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், “ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்பது எங்களுக்கும் தெரியும். அவருக்கும் தெரியும். இது இடையில் சிலர் கிளப்பிவிடும் பிரச்னை. இதன்மூலம் கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்ற நோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் சதி. வேறு எதுவும் இல்லை. அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை, அவர்களும் கவலைப்படவில்லை” என்று பதிலளித்தார்.

பிரவீன் சக்கரவர்த்தியின் கருத்து

இதற்கிடையில் முதலமைச்சரின் பேச்சுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வுத் துறையின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்துள்ளார். என்டிடிவி செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கு முக்கியமானது. இது ஒன்றும் தனித்துவமான விஷயம் அல்ல. மஹாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், கேரளா, பிஹார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி ஆட்சியின் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்துள்ளது. இப்படி இருக்கும்போது இதை ஏதோ தனித்துவமானது போல் காட்டிக்கொண்டு அதன் பின்னால் ஏன் ஒளிந்துகொள்ள வேண்டும்? நாட்டின் மற்ற மாநில மக்களைப் போல் தமிழ்நாட்டு மக்களுக்கும் கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்னையும் கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Chief Minister Stalin has categorically stated that a coalition government is not suitable for Tamil Nadu.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in