ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில் திமுகவின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா, திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் இன்று நடைபெற்றது.
விழாவின் தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக உருவாக்கப்பட்ட மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த விழாவுக்கான வாழ்த்துரையை வழங்கினார்.
இந்த விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில், மண்டலவாரியாக திமுகவின் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட திமுகவினருக்கு நற்சான்றிதழையும், பண முடிப்பையும் வழங்கிக் கௌரவித்தார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின்.
இதைத் தொடர்ந்து ‘கழகம் நல்ல கழகம்’ என்ற பாடலுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது
“நம்முடைய இலக்கு 2026 தேர்தல். இதுவரை இப்படி ஒரு வெற்றியை எந்தக் கட்சியும் பெற்றது இல்லை என வரலாறு சொல்ல வேண்டும். இதை நான் ஆணவத்தில் பேசவில்லை. தொண்டர்கள் மீதான நம்பிக்கையில் பேசுகிறேன்.
ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் கழித்தும் கம்பீரமாக காட்சியளிப்பது சாதாரணமான சாதனை அல்ல. தொண்டர்களின் மூச்சுக்காற்று, ரத்தம், உழைப்பால்தான் திமுக 75 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது.
உலகத்தின் எந்த ஓர் அரசியல் இயக்கமும் உடன்பிறப்பு என்கிற பாச உணர்வோடு கட்டமைக்கப்படவில்லை. ஆனால், தலைவன் - தொண்டன் என இல்லாமல் அண்ணன் - தம்பி என்கிற பாச உணர்வோடு நம் இயக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்து வந்த 75 ஆண்டுகளில் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 14 நாட்கள் அமெரிக்கா சென்றோம் என்று சொல்வதை விட வென்றோம் என்றுதான் சொல்ல வேண்டும். எனக்கு அமெரிக்க வாழ் மக்கள் கொடுத்த வரவேற்பு மறக்கவே முடியாது.
திமுக முப்பெரும் விழாவில் விருது வென்றவர்களுக்கு எனது பாராட்டை தெரிவிப்பதுடன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்குரியவர்கள் என்பதையும் கூறிக்கொள்கிறேன். பெரியார் விருது பெற்ற பாப்பம்மாள், கழகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து 108 வயதிலும் கழகத்தின் அடையாளமாக இருக்கிறார்.
தமிழ்நாடும், திமுகவும் எனது இரு கண்கள் என செயல்பட்டுவரும் இந்நேரத்தில் பவள விழாவில் பங்கேற்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்”.
இவ்வாறு அவர் பேசினார்.