மலிவான அரசியல் செய்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஆவேசம் | MK Stalin |

ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வைக்க முடியாமல் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டி வருவதாகவும் சாடல்...
மலிவான அரசியல் செய்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஆவேசம் | MK Stalin |
2 min read

மலிவான அரசியல் செய்பவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் மக்களுக்கு பதிலளிக்கக் கடமைப் பட்டுள்ளோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியில் ரூ. 2885 கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,

”கடந்த ஆதிமுக ஆட்சியின் 10 ஆண்டு கால நெல் கொள்முதல் விட, நமது திராவிட மாடல் ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 6 லட்சம் மெட்ரிக் டன் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தொடர்ந்து தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அரசு விழாவில், இதுவரை நடக்காத அளவுக்கு ரூ. 1200 கோடி மதிப்பில் 85,711 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. நகரப் பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணியை நமது அரசு வெற்றிகரமாக முடித்துள்ளது. கிருஷ்ணகிரி நகராட்சியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்ட மனைகள், ரயத்துவாரி நத்தம் மனையாக மாற்றப்பட்டு, 3500 பேருக்கும், ஒசூர் மாநகராட்சியில் 8050 பயனாளிகளுக்கும் நத்தம் மனை கணினிப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றியுள்ளோம். இதுதான் நமது சிறப்பான சாதனை.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் பல்வேறு முக்கிய திட்டங்கள் கிடைத்துள்ளன. இவ்விழாவில்லும் ஐந்து புதிய அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன். அஞ்சட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும். கிளமங்கல ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மலை கிராமங்களுக்கு ரூ. 12 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கப்படும். கிளமங்கலப் புறவழிச் சாலை அமைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்படும். ஒசூர் மாநகரத்தில் புதிய சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும். ஒசூர் மாநகரில் எல்சி104 ரயில்வே பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

திமுக அரசின் சாதனைகளைத் தாங்க முடியாத எதிர்க்கட்சிகள், ஆக்கபூர்வமான எந்த விமர்சனத்தையும் வைக்க முடியாமல், வயிற்றெரிச்சலில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொத்தாம் பொதுவாகக் கூறுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறோம். காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லாமல் செயல்படுத்தப்பட்டவை. ஆனால், சிலர் இதைத் தெரிந்தும் மறைத்து, பொய்களைப் பரப்புகின்றனர். மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றாலும், வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

நீட் விலக்கு போன்ற வாக்குறுதிகளை இப்போதைக்கு நிறைவேற்ற முடியவில்லை என்று மறுக்கவில்லை. ஆனால், முயற்சி செய்யாமல் இருக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன், நீட் விலக்கு சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். ஆளுநர் மூலம் சூழ்ச்சியால் அது தடுக்கப்பட்டது. இதை நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுகவின் 10 ஆண்டு சீர்கேட்டால் தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு ஓடின. நாங்கள் அதை மாற்றியுள்ளோம். பழனிசாமி ஆட்சியில் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் பாதி ஒப்பந்தங்கள் கூட செயல்படவில்லை. ஆனால், நாங்கள் வெளிநாடு சென்று செய்த ஒப்பந்தங்களில் 77% நிறுவனங்கள் வந்துள்ளன. தமிழ்நாட்டை தெற்காசியாவின் முன்னேறிய மாநிலமாக உருவாக்குவேன் என்று உறுதியளிக்கிறேன். அவதூறுகள், பொய்கள், வீண்பழிகளைப் பற்றி கவலைப்படவில்லை” இவ்வாறு பேசினார்.

CM Stalin | MK Stalin | Krishnagiri | Hosur |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in