ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கறுப்பு சிவப்புப் படை தக்க பாடம் புகட்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகளைத் திமுக தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கூட்டங்களை நடத்தி வருகிறது.
அதன்படி, இன்று மயிலாப்பூர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது வாக்குச்சாவடி உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், தனது வாக்குச்சாவடியில் 440 வாக்குகளை இலக்காக நிர்ணயித்துக் கொடுத்தார். இதற்கடுத்தபடியாக திமுக வாக்குச்சாவடி உறுப்பினர்கள் வீடுதோறும் சென்று பிரசாரம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்குச்சாவடி கூட்டத்தில் கலந்து கொண்ட படங்களைத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுள்ளார். அத்துடன் அவர் கூறியிருப்பதாவது:-
“எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? தில்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த தில்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான்!” என்று பதிவிட்டுள்ளார்.
Chief Minister Stalin has said that the Black and Red Army will teach a lesson at every polling booth.