
ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 24 அன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் மே 23 அன்று தில்லி செல்கிறார். முதலில் மே 23 அன்று மாலை புறப்படுவதாக இருந்த முதல்வரின் பயணத்திட்டம் மே 23 அன்று காலை புறப்படும் வகையில் மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி செல்வதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் தளப் பதிவு:
"'மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்' என்று வீராவேசமாகப் பேசிய பொம்மை வேந்தர் மு.க. ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்! அன்று 2ஜி-க்காக அப்பா தில்லி சென்றார்...
இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி... வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா... எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு!" என்று எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சனம் வைத்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினின் எக்ஸ் தளப் பதிவு:
"தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி தில்லி செல்கிறேன்!
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!" என்று மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நிலுவையில் உள்ள ரூ. 2,291 கோடி கல்வி நிதியை மத்திய அரசு விடுவிக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.