அமெரிக்கா சென்றடைந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டார். சான் பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார்கள். அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். இளைஞர்கள் நடனமாடியும் முதல்வரை வரவேற்றார்கள்.
அமெரிக்கா சென்றடைந்தது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில், "தமிழ்நாட்டைச் செழுமைப்படுத்துவதற்கான ஆதரவைத் திரட்ட வாய்ப்புகளின் பூமியான அமெரிக்கா சென்றடைந்தேன்" என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதல்வர் உரையாற்றுகிறார். ஆகஸ்ட் 31 அன்று புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்துப் பேசுகிறார். செப்டம்பர் 2 அன்று சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சிகாகோ செல்கிறார்.
10 நாட்களுக்கு அமெரிக்காவில் உள்ள முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்கிட அழைப்பு விடுக்கவிருக்கிறார்.
“ஃபார்ச்சூன் 500” நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளை சந்தித்து உரையாடவிருக்கிறார். செப்டம்பர் 7-ஆம் நாள் சிகாகோவில் தமிழர்களுடனான மாபெரும் சந்திப்பு நிகழவிருக்கிறது. செப்டம்பர் 14 அன்று தமிழ்நாட்டுக்குத் திரும்புகிறார்.