அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும் என கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிவுகள் வெளியானது. இதில், பாஜக தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியை உள்ளடக்கிய கூட்டணி முதல்முறையாக 40-க்கு 40 என அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்து திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
“தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் நமது கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இண்டியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும்”.