

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கும் வகையில் புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருதல், புதிய பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ; அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பான, போட்டோ - ஜியோ உள்ளிட்ட சங்கங்கள் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன.
அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை
இதையடுத்து கடந்த டிசம்பர் 22 அன்று தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனால் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று (ஜன 2) மீண்டும் அமைச்சர்களுடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும், அதனடிப்படையில் சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கும் வகையில் புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி,
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50%-க்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10% பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்.
50% உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவவர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதார் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடுப்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60% குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போலும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப ரூ. 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்.
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.
மேற்கூறிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு கூடுதலாக தமிழ்நாடு அரசு ரூ.13,000 கோடி அளிக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.11,000 கோடி அரசின் பங்களிப்பாக வழங்க வேண்டும். இந்தப் பங்களிப்புத் தொகை பணியாளர்களின் ஊதியத்திற்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் மேலும் உயரும். தற்போது தமிழ்நாடு அரசு சந்தித்துத் வரும் கடுமையான நிதிச்சூழலிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, மேற்கூறிய செலவினங்களை தமிழ்நாடு அரசே முழுமையாக ஏற்றிடும்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனையும் அவர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தையும் மனதில் கொண்டு, தொலைநோக்குப் பார்வையுடனும் நடைமுறை சாத்தியங்களுடனும் கூடிய வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் 20 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான ஓய்வூதியத்தையும், பணப் பயன்களையும் பெற வழிவகுக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தினை, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருமனதாக வரவேற்று, அதனைச் செயல்படுத்துவதற்கான முழு ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Chief Minister M.K. Stalin has issued an order to implement the new scheme ‘Tamil Nadu Assured Pension Scheme’ to provide the benefits of the old pension scheme, fulfilling the two-year-old demand of government employees and teachers in Tamil Nadu.