
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் இடம் ஒதுக்குவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
"ஈரோட்டில் நேற்று கள ஆய்வு நடத்தினேன். கள ஆய்வைப் பொறுத்தவரை, இன்னும் வேகமான வகையில் உற்சாகத்தோடு பணியாற்ற உறுதியளித்துள்ளார்கள். வரக்கூடிய 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை நாங்கள் வைத்துள்ளோம்.
ஈரோட்டில் நடத்திய கள ஆய்வில், 200 இடங்களையும் தாண்டிவிடுவோம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. ராகுல் காந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை, அவர் சட்டரீதியாக எதிர்கொள்வார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக கூட்டணி வசமாகும். ஏற்கெனவே இண்டியா கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. எனவே, இண்டியா கூட்டணி வசம் ஆகும். ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுவது குறித்து, முறையாக அவர்களிடத்தில் கலந்துபேசி முடிவெடுத்து அறிவிப்போம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது கொடுமையான ஒரு முடிவு. அது ஜனநாயகத்தைப் படுகுழிக்குள் தள்ளக்கூடிய மோசமான செயல் ஆகும்.
அம்பேத்கர் குறித்த விவகாரத்தில் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களோடு ஆலோசனை நடத்தி, அதுகுறித்து முடிவெடுத்து அறிவிப்போம்" என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இறுதியாக, நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு நன்றாகப் பார்க்கிறேன் என்று பதிலளித்துக் கடந்தார்.