அரசியலில் சொகுசு என்பதற்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு | MK Stalin |

அரசியலில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பதவி மோகத்தில் இருந்தோம் என்பதே போதும் என்று சிலர் நினைக்கிறார்கள்...
அரசியலில் சொகுசு என்பதற்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு | MK Stalin |
2 min read

அரசியல் என்பது கடுமையான மக்கள் பணி, அதில் சொகுசு என்பதற்கு இடமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்புக் கரங்கள் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் பேசியதாவது -

”இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை இன்னும் கவனித்துக்கொள்ளத்தான் இந்த அன்பு கரங்கள் திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். நான் இருக்கிறேன், உங்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்கிறேன். இன்னைக்கு ரொம்ப முக்கியமான நாள். அறிஞர் அண்ணாவுடைய பிறந்தநாள். ”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்று திராவிட மாடல் ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவருடைய பிறந்தநாள் இன்று.

திராவிட மாடல் என்றால், "எல்லோருக்கும் எல்லாம்" என்று எளிய விளக்கம் சொல்லிடலாம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க உழைப்பதும், பாடுபடுவதும் எளிதானது அல்ல இந்திய சமூக சூழலில். இவர்களுக்கு எதுவுமே தெரியக்கூடாது என்று ஒதுக்கப்பட்ட சாமானிய மக்களுடைய எழுச்சிதான் திராவிட இயக்கம். அதனால்தான் மக்களுடைய மக்களாக, மக்களுடைய குரலாக, திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. மக்களுடைய தேவைகளையும், இந்த சமூகத்திற்குத் தேவையான மாற்றங்களையும், ஆட்சிப் பொறுப்பைப் பயன்படுத்தி இன்றைக்கு நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

அரசியல் என்பது மக்கள் பணி, அது கடுமையான பணி. எங்களைப் பொறுத்தவரை இங்கு சொகுசுக்கு இடமில்லை. நீங்களே பார்த்திருப்பீர்கள், காலையில் ஒரு இடத்தில் மக்களோடு பேசிக்கொண்டிருப்பேன், மாலையில் பல நூறு கிலோமீட்டர் கடந்து இன்னொரு ஊரில், இன்னொரு பகுதியில் மக்களோடு இருப்பேன். இந்த உழைப்பைதான் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் எங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார்கள். இப்படி எப்போதும் மக்களுடைய மக்களாக இருப்பதனால்தான், கடைகோடி மனிதருக்கும் என்ன தேவை என்று பார்த்து, பார்த்து எங்களால் செய்ய முடிகிறது.

அரசியல் என்றால் பலர் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஏதோ ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து, பதவி மோகத்தில் இருந்தோம், சில கவர்ச்சியான திட்டங்களைச் செய்தோம், மறுபடியும் பதவி மோகத்தில் ஓட்டு தேர்தலுக்கு தயாராகவும் என்று நினைக்கிறார்கள். ஆனால், எங்களுடைய அடிப்படை பதவி அல்ல, பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காகப் போராடுவது. இன்று தாயுமானவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அன்பு கரங்கள் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். இதனால் 682 குழந்தைகளுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்கப் போகிறோம். இது என்ன வாக்கு அரசியலுக்காகப் செய்யும் காரியமா?

இன்று 21 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் காலையில் உணவு கொடுக்கிறோம். மாற்றுத் திறனாளிகள், திருநர்களுக்குப் பார்த்துப் பார்த்துத் திட்டங்களைச் செயல்படுத்துகிறோம். கொரோனாவில் பெற்றோர் இழந்த 15,775 குழந்தைகளுக்கு 511 கோடியே 27 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினோம். கொரோனாவில் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரு. 3000 வழங்கினோம். சமூக சேவை இல்லங்களில் தங்கியிருக்கும் 1400 பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு, விளையாட்டு பயிற்சிகள் வழங்குகிறோம். இதெல்லாம் வாக்கு அரசியலுக்காகச் செய்வதா?

இப்படி ஏராளமான திட்டங்களையும், முன்னெடுப்புகளையும் பட்டியலிட்டு சொல்லிக்கொண்டே இருக்க முடியும். இதற்கும் வாக்கரசியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையைப் பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் இருக்கிறது. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைகோடி மனிதரையும் கை கொடுத்து மேலே தூக்கி விடுவதுதான். அந்தக் கையாகத்தான் என்னுடைய கை இருக்கும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறது.

பெற்றோர் வேலைக்குப் போகிறார்கள் என்று குழந்தைகளுக்கு காலை உணவு கொடுக்கிறோம். பெற்றோரே இல்லாத குழந்தைகளை, ஒற்றைப் பெற்றோர் இருக்கக்கூடிய குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அடிப்படையில் உருவானதுதான் இந்த அன்பு கரங்கள் திட்டம். இந்தத் திட்டத்துக்காக மாவட்ட ஆட்சியரிடம் சொல்லி, பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொருவர் கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொருவர் மாற்றுத் திறனாளியாக இருக்கும் குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொருவர் சிறையில் இருந்தால் அவர்களுடைய குழந்தைகள், பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோய்களோடு வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அவர்களுடைய குழந்தைகள் என்று கணக்கெடுக்கச் சொன்னோம்.

அப்படி முதல் கட்டமாகக் கண்டறியப்பட்ட 6082 குழந்தைகளுக்கும், பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை இனிமேல் மாதம்தோறும் 2000 ரூபாய் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைத்திடுவோம். உங்களுக்கு 18 வயது ஆகும் வரை நீங்கள் கல்வியைத் தொடர, இந்த உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீங்கள் எல்லோரும் படித்து முன்னேறி வர வேண்டும். இதுதான் என்னுடைய விருப்பம், எங்களுடைய லட்சியம். இந்த லட்சியத்திற்கு துணையாகும் நம்ம திராவிட மாடல் அரசின் கரம்தான் அன்பு கரம்.

நாளைக்கு நீங்கள் படித்து டாக்டராக, இன்ஜினியராக, விஞ்ஞானியாக, அரசு அதிகாரியாக, அரசியல்வாதியாக உயர்ந்து, இந்த சமூகத்துக்கு, இந்த சமூக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். உங்களுடைய வெற்றி தமிழ்நாட்டோடு வரலாற்றைச் சொல்ல வேண்டும். அதற்கு உங்களுக்கு உதவியாளராக, நண்பனாக, பெற்றோராக, இந்த மு.க.ஸ்டாலின் இருக்கிறேன்.”

இவ்வாறு கூறினார்.

MK Stalin | TN CM | Anbu Karangal | TN Politics |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in