

மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக விக்சித் பாரத் - கேரன்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா என்ற திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்த மசோதா, குளிர்காலத் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் உள்ள 100 நாள் வேலையை 125 நாள்களாக உயர்த்தப்படும் என்றும், தொழிலாளர்களுக்கான ஊதியத்தின் மொத்தச் செலவில் 40% மாநில அரசும் 60% மத்திய அரசும் ஏற்கும் நடைமுறை ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், இத்திட்டத்தால் மாநிலங்களின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்று குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகள் இதனை எதிர்க்கிறார்கள்.
இந்நிலையில், மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை மத்திய பாஜக அரசு சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது மத்திய பாஜக அரசு. தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள். 100% மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம். இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம். பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு. விவசாய சட்டங்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே விக்சித் பாரத் - கேரண்டி ஃபார் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Chief Minister Stalin has condemned the central BJP government for destroying and dismantling the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA).