பிஹாரிகள் துன்புறுத்தப் படுகிறார்களா?: பிரதமர் பேச்சுக்கு முதல்வர் கண்டனம் | MK Stalin | PM Modi |

பாஜகவினர் தமிழர்களின் மீது வன்மத்தை வெளிப்படுத்துவதைக் கண்டிக்கிறேன்...
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
1 min read

பிஹார் மக்கள் தமிழ்நாட்டில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று பிஹாரின் சப்ரா பகுதியில் பாஜக பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது இண்டியா கூட்டணியைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக “கர்நாடகத்திலும் தெலங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியினர் பிஹார் மக்களை அவமதித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் திமுகவும் பிஹார் மக்களை துன்புறுத்துகிறது. தங்கள் மாநிலங்களில் யாரெல்லாம் பிஹாரிகளை இழிவுப்படுத்துகிறார்களோ, அவர்களை எல்லாம் இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணிக்காக பிரசாரத்திற்கு அழைத்துள்ளார்கள்” என்று பேசினார்.

இதையடுத்து, பிரதமரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

“இந்த நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு தமிழனாக வேதனையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஒடிசா - பிஹார் என்று எங்கு சென்றாலும், பாஜகவினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்குத் தமிழ்நாட்டு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்முகத்தன்மை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமையைக் காணும் பெருமைமிக்க இந்தியாவில், இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் பகையை வளர்ப்பது, தமிழர்களுக்கும் பிஹார் மக்களுக்கும் பகை உண்டாக்கும்படி நடந்துகொள்வது போன்ற அற்ப அரசியல் செயல்பாடுகளை நிறுத்திவிட்டு, நாட்டின் நலன் மீது பிரதமரும் பாஜகவினரும் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Chief Minister M.K. Stalin has condemned Prime Minister Modi's statement that people from Bihar are being harassed in Tamil Nadu.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in