மதுரைக்கும் கோவைக்கும் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டு வருவோம்: முதலமைச்சர் ஸ்டாலின் | MK Stalin |

மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல...
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
1 min read

மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் சேவை வழங்க முடியாது என்று மத்திய பாஜக அரசு மறுத்து, எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்புடைய விரிவான திட்ட அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தத் திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால், குறைந்தபட்ச மக்கள்தொகை 20 லட்சம் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என்று காரணம் காட்டி மத்திய அரசு நிராகரித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று வலியுறுத்தியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய பாஜக அரசு புறக்கணிப்பது அழகல்ல என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

“கோயில் நகரமான மதுரைக்கும், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவைக்கும் மெட்ரோ ரயில் இல்லை என்று மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளது. அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பாஜகவைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை மற்றும் கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்! தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்.” என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Chief Minister M.K. Stalin has condemned the central BJP government's refusal to provide metro rail services to Madurai and Coimbatore, saying it is unethical to ignore opposition-ruled states.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in