கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷுக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் கௌரவிப்பு! | MK Stalin | Kannagi Nagar Karthika

"'உங்க ஏரியாவில் இப்ப பிரச்னைகள் தீர்ந்திருக்கா?' என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்."
முதல்வருடன் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ்
முதல்வருடன் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ்படம்: https://x.com/mkstalin
2 min read

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் தங்கம் வென்ற கண்ணகி நகர் கார்த்திகா, அபினேஷ் மோகன்தாஸுக்கு தலா ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் கௌரவித்தார்.

பஹ்ரைனில் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கபடி விளையாட்டின் இறுதிச் சுற்றில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 75-21 என்ற கணக்கில் வென்று தங்கத்தை வென்றது. இந்த அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகா இடம்பெற்று மாநிலத்துக்குப் பெருமை சேர்த்தார்.

இதேபோல ஆடவர் அணியும் இந்தப் போட்டியில் கபடியில் தங்கம் வென்றது. ஆடவர் அணியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் இடம்பெற்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்தார்.

குறிப்பாக, எளிய பின்புலத்திலிருந்து வந்து இந்தியாவுக்குப் பெருமை சேர்த்ததற்காக கண்ணகி நகர் கார்த்திகாவை தமிழ்நாடு அரசு கௌரவிக்க வேண்டும், ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனப் பல்வேறு குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பினார்கள். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்திலிருந்து இருவரும் நேராக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்தார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் இருவருக்கும் தலா ரூ. 25 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் கௌரவித்தார்.

எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டுத் தங்கங்களுக்கு ஊக்கத்தொகையுடன் உற்சாக வரவேற்பு!

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற நம் கபடி வீரர்கள் கண்ணகி நகர் கார்த்திகா மற்றும் திருவாரூரைச் சேர்ந்த அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை திரும்பியதும், நேராக எனது இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டி, இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகை வழங்கினேன்.

கண்ணகி நகருக்கு நான் சென்றபோதெல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தர உத்தரவிட்டிருந்ததை நினைவுகூர்ந்து, "உங்க ஏரியாவில் இப்ப பிரச்னைகள் தீர்ந்திருக்கா?" என்று கார்த்திகாவிடம் கேட்டேன். கடந்த 4 ஆண்டுகளில் பெருமளவில் கண்ணகி நகர் முன்னேறியிருப்பதாகப் புன்னகையோடு சொன்னார்.

கார்த்திகா அவர்களும் அபினேஷ் அவர்களும் மேலும் சில உதவிகளையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவற்றையும் நிறைவேற்றித் தருவோம்.

நேற்று நான் பைசன் காளமாடனில் கண்ட மணத்தி கணேசன் தொடங்கி, இன்று அபினேஷ், கார்த்திகா வரை எளிய பின்புலங்களில் இருந்து சாதிக்கும் ஒவ்வொரு வீரரின் வெற்றியிலும் சமூகநீதி மண்ணான தமிழ்நாடு பெருமை கொள்கிறது" என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பைசன் காளமாடன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் இப்படத்தைப் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

Summary

MK Stalin felicitated Kannagi Nagar’s Karthika and Abinesh, awarding them ₹25 lakh each for winning gold in Kabaddi at the 2025 Asian Youth Games.

Kannagi Nagar Karthika | MK Stalin | Asian Youth Games 2025 | Kabaddi | Abinesh Mohandas |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in