
வேலூரில் ரயில் பெட்டியிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் சித்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சித்தூருக்குச் செல்வதற்காக பிப்ரவரி 6 அன்று கோவை - திருப்பதி இண்டர்சிட்டி விரைவு ரயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் அவர் பயணித்துள்ளார். அந்தப் பெட்டியில் உடன் பயணித்த பெண்கள் அனைவரும் ஜோலார்பேட்டையில் இறங்கினார்கள். இதைத் தொடர்ந்து, ஹேமராஜ் என்பவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். காவல் துறையினரை அழைக்க கர்ப்பிணி முயன்றதையடுத்து, அவர் அந்தப் பெண்ணை ரயிலிலிருந்து தள்ளிவிட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கர்ப்பிணி, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், கர்ப்பிணிக்கு நேற்று கருச் சிதைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் ராணிப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சுயநினைவு திரும்பியவுடன் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் ஹேமராஜ் என்பவர் ரயில்வே காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், ராணிப்பேட்டையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், சிகிச்சைக்கான முழு மருத்துவச் செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.