திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,000 உரிமைத் தொகை: முதலமைச்சர் அறிவிப்பு
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,000 உரிமைத் தொகை: முதலமைச்சர் அறிவிப்பு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ.2,000 உரிமைத் தொகை: முதலமைச்சர் அறிவிப்பு | MK Stalin |

மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 செலுத்திய தமிழ்நாடு அரசு...
Published on

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்கும் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரு கட்டங்களாகத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டார். குறிப்பாக, குலவிளக்கு திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 2,000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வங்கிக் கணக்கில் ரூ. 5,000

முன்னதாக இன்று மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்கு அடுத்த 3 மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ. 2,000 என ரூ. 5,000 தமிழ்நாடு அரசு சார்பில் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

முதலமைச்சர் ஸ்டாலினின் காணொளி

“இன்று காலை நமது அரசு சார்பாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு ரூ. 5,000 வந்திருக்கும். இந்த பணம் எதற்காக? நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதைச் சமாளித்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றியது மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க ரூ. 4,000 நிவாரணத் தொகையையும் வழங்கினோம். முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளித்து ஆட்சிக்கு வந்தவுடனேயே பல திட்டங்களை நிறைவேற்றினோம். நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன், மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தேன். அப்போது சிலர் இது சாத்தியமே இல்லை என்றார்கள். ஆனாலும், நிதி நெருக்கடியைச் சமாளித்து, மத்திய அரசின் பாகுபாட்டையும் மீறி, கடந்த 2023 செப்டம்பர் முதல் மகளிர் உரிமைத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறோம்.

உங்கள் வீட்டில் ஒருவனாக

ஒரு கோடியே 31 லட்சம் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் இந்தத் திட்டத்தை மூன்று மாதம் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என்று உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கும் எனக்கு நன்றாகத் தெரியும். கடுமையான வெயிலில் வேலைக்குச் செல்லக் கஷ்டமான கோடைக்காலத்தில் இந்தத் தொகை நிறுத்தப்பட்டால், உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்று என்னால் உணர முடியும். உங்கள் மாதந்திர செலவை எப்படிச் சமாளிப்பீர்கள்? உங்கள் குடும்பத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மாத்திரை வாங்கி கொடுக்க முடியுமா? குழந்தைகள் தேர்வு எழுதும் காலத்தில் அவர்களுக்கு உணவு கொடுப்பதிலிருந்து தேவையான கல்விச் செலவுகளைச் செய்ய முடியுமா? இந்தக் கஷ்டங்களையெல்லாம் நினைத்துப் பார்த்துதான் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்.

உரிமைத் தொகை, கோடைக்கால சிறப்புத் தொகை

அதன்படி இந்த பிப்ரவரி மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு மாதங்களுக்கான அதாவது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை தவணைகளைச் சேர்த்து ரூ. 3,000, கூடுதலாக கோடைகாலச் செலவுகளைக் கருத்தில் கொண்டு மேலும் ரூ. 2,000 சிறப்புத் தொகையும் சேர்த்து இந்த பிப்ரவரி மாதம் ரூ. 5,000 சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தப்படும்

இந்தத் தருணத்தில் மற்றொரு அன்பான வேண்டுகோள். இந்த ரூ. 5,000-யை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதால் கொஞ்சம் கவனமாகச் செலவு செய்யுங்கள். முடிந்த அளவுக்கு சேமிக்கவும் பாருங்கள். அன்பு சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமையும் அரசும் திராவிட மாடல் ஆட்சிதான். அதனால்தான் நீங்கள் மனம் குளிரும் சிறப்பான ஒரு அறிவிப்பையும் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன். அடுத்த திராவிட மாடல் 2.0 ஆட்சிக் காலத்தில் உங்களது உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதையும் எப்படிச் செய்வோம் என்று சிலர் கேட்கலாம். கடந்த ஆட்சியின் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு அடைய முடியாத பொருளாதார வளர்ச்சியை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அளவுக்குச் சாதித்துக் காட்டினோம் நாங்கள். அதனால் எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி தமிழ்நாடே! வெல்வோம் ஒன்றாக” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Chief Minister Stalin has announced that if the DMK comes to power again in the 2026 assembly elections, Magalir Urimai Thogai amount will be increased to Rs. 2,000.

logo
Kizhakku News
kizhakkunews.in