மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக சார்பில் ஓர் இடம் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
2 min read

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 18 பேர் மாநிலங்களவைக்குத் தேர்வாகியுள்ளார்கள். இவர்களில் அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என். சந்திரசேகரன், எம். முஹமது அப்துல்லா, பி. வில்சன், வைகோ ஆகியோரது பதவிக் காலம் ஜூலை 24-ல் நிறைவடைகிறது. காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இரு நாள்களுக்கு முன்பு அறிவித்தது.

திமுக மற்றும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், காலியாகும் 6 இடங்களில் திமுக சார்பில் 4 பேரும் அதிமுக சார்பில் 2 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்வாக வாய்ப்புள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். பி. வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர்கள்

  • பி. வில்சன்

  • எஸ்.ஆர். சிவலிங்கம்

  • ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா

மீதமுள்ள ஓர் இடம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டதன்படி, மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படுவதாகவும் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த முறை திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவைக்குத் தேர்வானார். அவருக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டி

2024 மக்களவைத் தேர்தலின்போது திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. எனினும், மாநிலங்களவையில் ஓர் இடம் ஒதுக்கப்படும் என அந்நேரத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன்படி, மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்த மு.க. ஸ்டாலின், ஓர் இடம் ஏற்கெனவே ஒப்புக்கொண்டதன்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்படி, மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் 1

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19 அன்று நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் கமல் ஹாசனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.

தீர்மானம் 2

மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான கமல் ஹாசன் அவர்களுக்குத் தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in