தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் மக்கள் அதிர்ச்சியான செய்தியைத் தரவிருக்கிறார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தந்தி சேனலுக்கு பிரத்யேகமாகப் பேட்டியளித்துள்ளார். இதில் அமலாக்கத் துறை சோதனைகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெறாதது, தேர்தல் நிதி பத்திரங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் பேசினார்.
அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு வாக்காளித்தாலும், நான் அவர்களுடைய திறன், ஆசைகள் லட்சியங்கள் குறித்து சிந்திப்பேன். தமிழ்நாடு மக்கள் மீது எனக்கு எந்தக் குற்றச்சாட்டும் கிடையாது.
அண்ணாமலை மக்களின் கவனத்தை ஈர்க்கிறார், குறிப்பாக இளைஞர்களை மிகவும் ஈர்க்கிறார். நல்ல வேலையைத் துறந்து அரசியலுக்கு வந்துள்ளார். பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், அவர் திமுக, அதிமுகவில் சேர்ந்திருப்பார். பாஜகவில் இணைய வேண்டும் என சிந்திக்கிறார் என்றால், அவர் நாட்டு நலனைக் கையிலெடுத்திருக்கிறார் என்று அர்த்தம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம்பெறாமல் போனதற்கு அதிமுகதான் வருத்தப்பட வேண்டும். இதில் பாஜக வருத்தப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை.
ராமர் கோயில் விவகாரம் தமிழ்நாட்டில் எவ்வித தாக்கத்தையும் உண்டாக்காது என்று சொல்பவர்களைப் பார்த்து என்ன சொல்வது. ராமர் பெயரில் அதிகமான ஊர்கள் இருப்பது நம்ம தமிழ்நாட்டில்தான். அயோத்திக்கு அருகில்கூட ராமர் பெயரில் இத்தனை இடங்கள் கிடையாது. ஆண்களின் பெயர்களைப் பார்த்தால்கூட ராமர் பெயர் கொண்டவர்களை அதிகம் பார்க்க முடியும்.
அமலாக்கத் துறை, பணமோசடி தடுப்புச் சட்டம் எங்களால் கொண்டுவரப்பட்டதல்ல, முன்பிருந்தே உள்ளன. கேள்வி என்னவென்றால், அமலாக்கத் துறை எப்படி செயல்படுகிறது. அதுவொரு சுதந்திரமான அமைப்பு. அது சுதந்திரமாகப் பணியாற்றுகிறது. அதை நாங்கள் தடுக்கவில்லை. யார் மீதும் ஏவுவதும் இல்லை.
காங்கிரஸ் ஆட்சியில் அமலாக்கத் துறை மூலம் பிடித்த மொத்த பணம் வெறும் ரூ. 35 லட்சம் மட்டுமே. ஆனால், நாங்கள் பிடித்துள்ள பணம் ரூ. 2,200 கோடி. இதன் பொருள் என்னவென்றால், இந்த அமைப்பின் சோதனைகள் வெளியில் யாருக்கும் தெரியாது. இதனால்தான் இந்தப் பணம் பிடிபடுகின்றன.
யாராக இருந்தாலும், அமலாக்கத் துறைக்கு ஒற்றை நடைமுறைதான். அமலாக்கத் துறை தாமாக முன்வந்து எந்த வழக்கையும் பதிவு செய்ய முடியாது.
புத்திசாலிகளிடம் கேட்கிறேன். 2014-க்கு முன்பு எத்தனை தேர்தல்கள் நடந்துள்ளன. அத்தனை தேர்தல்களிலும் எவ்வளவு செலவாகியிருக்கும். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது, யாருக்குக் கொடுக்கப்பட்டது என்று எந்த நிறுவனமாவது சொல்ல முடியுமா?
ஆனால், தற்போது மோடி தேர்தல் பத்திரத்தை உருவாக்கியுள்ளார். இதனால், பணத்தை யார் கொடுத்தது, யார் வாங்கியது, எப்போது கொடுக்கப்பட்டது என்கிற தகவல்கள் வெளிவருகின்றன. எனவே, தேர்தல் பத்திரங்கள் முறையில் சில குறைபாடுகள் இருக்கலாம். அவற்றைத் தீர்த்துவிட்டால், இதிலும் சில நன்மைகள் கிடைக்கலாம்.
ஓர் அரசியல் கட்சியை ஒரு குடும்பம் நடத்தினால், அந்தக் கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஒரு குடும்பம் எடுத்தால், அந்தக் கட்சியின் அடுத்த தலைமுறை கட்சியின் பொறுப்புக்கு வருகிறது என்றால் அதைதான் குடும்ப வாரிசு அரசியல் என்பேன். அங்கு ஜனநாயகம் இல்லை.
ஸ்டாலினுக்கும், திமுகவுக்கும் மக்கள் கடுமையான செய்தியைத் தரவிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை துறைமுகம், சுற்றுலாத் துறை என அனைத்துத் துறைகளுக்கும் என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும்" என்றார் பிரதமர் மோடி.