தடைகளை கடந்து 12-ம் வகுப்பு தேர்வில் சாதித்த நாங்குநேரி மாணவர் சின்னதுரை மற்றும் திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1 முதல் மார்ச் 22 வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை 7.72 லட்சம் மாணவர்கள், 9,191 தனித் தேர்வர்கள், 125 சிறைக் கைதிகள் என மொத்தம் 7.67 லட்சம் பேர் எழுதினார்கள். இந்நிலையில் இதன் முடிவுகள் நேற்று வெளியாகின. தமிழ்நாட்டில் 94.56 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இதில் திருநங்கை நிவேதா என்பவர் பல தடைகளை கடந்து 283 மதிபெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய ஒரேஒரு திருநங்கை மாணவி நிவேதாதான். அதேபோல திருநெல்வேலியில் சாதியக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவன் சின்னதுரை 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில் இன்று நாங்குநேரி மாணவர் சின்னதுரை மற்றும் திருநங்கை நிவேதா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் பேனாவை அன்பளிப்பாக வழங்கினார் ஸ்டாலின்.