தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

“மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது ரூ. 37,907 கோடி”.
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்ANI

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு மற்றும் வெள்ளப் பாதிப்புக்காக ரூ. 276 கோடி பணத்தை நிவாரணமாக மத்திய அரசு நேற்று விடுவித்தது. மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 285 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், அதில் ரூ. 115 கோடியே 49 லட்சத்தை மத்திய அரசு விடுவிக்கப்பட்டது. மேலும், வெள்ளப் பாதிப்பிற்காக ரூ. 397 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், ரூ. 160 கோடியே 61 லட்சம் விடுவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, “தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது” எனக் கூறி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது ரூ. 37,907 கோடி.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது ரூ. 2,477 கோடி.

ஆனால், ஒன்றிய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் ரூ. 276 கோடி. இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in