சென்னையிலுள்ள பறக்கும் ரயில் சேவையை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டுடன் இணைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் 1997 முதல் பறக்கும் ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. தொடக்கத்தில் சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரை இயக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தச் சேவையானது நீட்டிக்கப்பட்டது. இறுதியாக நவம்பர் 2007-ல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. நாளொன்றுக்கு சுமார் 1 லட்சம் பயணிகள் இச்சேவையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
சென்னை பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைப்பது குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் கோரிக்கை வைத்தன. இதன் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டு கடந்த 2018 பிப்ரவரியில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டன.
பறக்கும் ரயில் சேவை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டால், பறக்கும் ரயில் சேவையின் தரம் உயர்த்தப்படும், ரயில் நிலையங்கள் நன்கு பராமரிக்கப்படும், ஏசி பெட்டிகள் இணைக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்பட்டன.
இதனிடையே, சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே பறக்கும் ரயில் சேவைக்கானக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகே, சென்னை பறக்கும் ரயில் சேவை சென்னை மெட்ரோ வசம் ஒப்படைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி வந்தன. கடந்த ஜூலை 31 அன்று பறக்கும் ரயில் சேவையை மெட்ரோவுடன் இணைப்பதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்தது. இதுதொடர்புடைய முறையான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்புடைய அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 31 அன்று தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே வாரியத்துக்கு இந்த இணைப்புத் திட்டம் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் இந்த ஒப்புதல் மூலம் பறக்கும் ரயில் சேவையின் தண்டவாளங்கள், பாலங்கள், சிக்னல்கள், நிலம், கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு சொத்துகள் மற்றும் ரயில் சேவையை வழங்குதல்/நிர்வகித்தல் மற்றும் பராமரித்தல் உள்பட அனைத்தையும் தமிழ்நாடு அரசு/சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வசம் செல்கின்றன. இதுதொடர்புடைய விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாராகி வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதலிரு ஆண்டுகளுக்கு ரயில் சேவையை வழங்குவது/நிர்வகிப்பது மற்றும் சொத்துகளைப் பராமரிப்பது குறித்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஊழியர்களுக்கு தெற்கு ரயில்வே பயிற்சியளிக்கும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
MRTS | Chennai Metro | CMRL | Tamil Nadu Government | Railway Board | Ministry of Railways | MoU