
தமிழக நகரங்களுக்கு இடையே ஏ.டி.ஆர். ரக சிறிய விமானங்களுக்கு பதிலாக, ஏ320 ரக பெரிய விமானங்களை இயக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் கணக்கில் இன்று (ஆக. 16) வெளியிட்ட பதிவில் டிஆர்பி ராஜா கூறியதாவது,
`மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலையிட்டு தமிழ்நாட்டிற்குள் இயக்கப்படும் விமானங்கள் மூலம் இழைக்கப்படும் அநீதியை சரிசெய்ய வேண்டும்!
சென்னை-திருச்சி மற்றும் சென்னை-தூத்துக்குடி ஆகிய விமான வழித்தடங்களில் இயக்கப்படும் ஒவ்வொரு இண்டிகோ விமானமும் முழுமையாக நிரம்பியிருந்தாலும், கொடூரமான ஏ.டி.ஆர். ரக (சிறிய) விமானங்களுக்கு பதிலாக ஏ320 ரக (பெரிய) விமானங்களை இயக்க மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் மறுப்பு தெரிவிக்கிறது !!!
3-ம் நிலை விமான நிலையங்களுக்கு இது பொருந்தலாம், ஆனால் மிகப்பெரிய அளவில் வணிக நோக்கத்தினாலான பயணிகளைக் காணும் இந்தியாவின் பொருளாதாரத்தை இயக்கும் ஒரு மாநிலத்திற்கு அல்ல. மேலும் மோசமான குளிர்சாதன வசதியுடன் கூடிய வியர்வையை வரவழைக்கும் வெப்பம் மிகுந்த இந்த விமானங்கள் பயணம் மேற்கொள்ளும்போது எஃப்.1 பந்தய வீரர்களைப்போல ஒரு கிலோ அல்லது இரண்டு கிலோ எடை குறையும் !!!
மாநிலத்திற்குள் மேற்கொள்ளும் பயணங்களின்போது நிலையான ஏ320 ரக விமானங்கள் அல்லாமல், மோசமான ஏ.டி.ஆர். ரக விமானங்கள் இயக்கப்படுவதாக, இன்று இருவர் உள்பட பல தொழிலதிபர்கள் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கென பெரிய விமானங்கள் அறிமுகப்படுத்துவதை வேண்டுமென்றே நிறுத்திவிட்டு, புதிய விமான நிலையங்களைத் திறப்பதன் பயன் என்ன?
அதிக கட்டணங்களை வசூலிக்கும் நிலையில், மத்திய அரசும், இண்டிகோ நிறுவனமும் இந்த மிகப்பெரிய அலட்சியத்தையும், பயணிகளின் பாதுகாப்பு வசதியை வேண்டுமென்றே புறக்கணிப்பதையும் நிறுத்தவேண்டும்!
இந்த ஏ.டி.ஆர். ரக விமானங்கள் கொந்தளிப்புக்கு ஆளாகின்றன என்பதையும், கடினமான தரையிறக்கங்களுக்கு பெயர் பெற்றவை என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள், அதனால்தான் அடிக்கடி பயணிப்பவர்கள் பலர் இத்தகைய விமானங்களை தேர்வு செய்வதைத் தவிர்க்கிறார்கள்!
பல முதலீட்டாளர்கள் இதை எனக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர், நான் மத்திய அரசுக்குப் பல முறை கடிதம் எழுதி அமைச்சரிடம் பல முறை முறையிட்டுள்ளேன்! எங்கள் எம்.பி.க்களும் தனிப்பட்ட முறையில் இதை எழுப்பியுள்ளனர் !!! அதன் பரபரப்பான பாதைகளில் எதனால் சிறிய ரக விமானங்களை இண்டிகோ தேர்வு செய்கிறது !!!’ என்றார்.