
தமிழகத்தின் நிதிநிலை மேம்பட்டுள்ளது: வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னையில், தமிழக அரசின் தொலைநோக்கு திட்டங்களின் செயலாக்கம் குறித்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி செழியன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை மற்றும் வருவாய்ப் பற்றாக்குறை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”திமுக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 364 செயல்பாட்டில் உள்ளது, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளது. கடந்த 2021-ஆம் ஆட்சி பொறுப்பேற்றபோது, தமிழ்நாடு பெரும் நிதி நெருக்கடியில் இருந்தது. அப்போதைய சூழலில், நிதிப் பற்றாக்குறை மிக அதிகமாக இருந்தது. மேலும், வருவாய் பற்றாக்குறையும் கணிசமான அளவில் இருந்தது. இவற்றைச் சமாளிப்பது பெரிய சவாலாக இருந்தது. ஆனால், அரசின் சிறப்பான நிதி மேலாண்மைத் திட்டங்கள், வரி வசூல் முறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தியதன் மூலம் தற்போது நிதிநிலை முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது” என்றார்.
மேலும், “மத்திய அரசின் நிதிப்பங்களிப்பு முறையாக இல்லாத நிலையில் கூட, தமிழ்நாடு அரசு அதன் நிதி மேலாண்மையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, மாநிலங்களுக்கு உரிய வரிப்பகிர்வு மற்றும் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்குவதில் மத்திய அரசு தாமதம் செய்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு அதன் சொந்த வருவாயைப் பெருக்குவதிலும், செலவினங்களைக் கட்டுப்படுத்துவதிலும் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது” என்று பேசினார்.
அரசின் இந்த நிதி மேலாண்மை, சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது என்று கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இத்தகைய சீரிய நிதி நிர்வாகத்தின் மூலம், தமிழகம் அதன் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.