தி கோட் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், ரூ. 2 ஆயிரத்துக்கு டிக்கெட் விற்பனை செய்பவர் எப்படி நாட்டைக் காப்பார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
திமுக சார்பில் நடைபெற்று வரும் பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று திமுக மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் உரையாற்றி வருகிறார்கள். திருச்சி லால்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தெற்கு மத்திய மற்றும் வடக்கு ஒன்றியம் சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் திமுகவுக்கு எதிரிகள் அதிகம் இருப்பதாக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு தெரிவித்தார்.
அமைச்சர் தா.மோ. அன்பரசன் கண்டோன்மெண்ட், திருப்போரூர் தெற்கு ஒன்றியம், திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். இவற்றின் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மாங்காடு நகர திமுக சார்பில் நடைபெற்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், விஜயின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை விமர்சித்து பேசினார்.
"சினிமா பார்க்கலாம், வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் திரையரங்குடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். நடிகரை பார்த்து ரசிக்கலாம், வேண்டாம் என்று சொல்லவில்லை. திரையரங்குடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
நடிகர்களுக்கு என்ன தகுதி உள்ளது? ஒரு படத்துக்கு ரூ. 200 கோடி, ரூ. 250 கோடி பணம் வாங்குகிறார்.
ரசிகர்கள் பிரியமாகத்தானே இருக்கிறார்கள். படம் வெளியாகும் முதல் நாளில் இலவசமாகவா டிக்கெட் கொடுக்கிறார். ஒரு டிக்கெட்டை ரூ. 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்கிறார்கள். இவரால் நாட்டைப் பாதுகாக்க முடியுமா?.
கடந்த வருடம் மட்டும்தான் அதிக மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசு கொடுத்தார். நாம் இதைத் தொடர்ந்து செய்து வருகிறோம்" என்றார் தா.மோ. அன்பரசன்.